

உலக இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-ஜோஸ்னா சின்னப்பா கூட்டணி 11-9, 4-11, 11-8 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் சாரா ஜானே பெர்ரி-அலிசன் வாட்டர்ஸ் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-சவுரவ் கோஷல் ஜோடி 11-6, 11-8 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்ஸ்-அட்ரியன் வாலெர் இணையை விரட்டியடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவது இதுவே முதல்முறையாகும்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியான 30 வயது தீபிகா பலிக்கல் சென்னையை சேர்ந்தவர் ஆவார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தீபிகா பலிக்கல் அதன் பிறகு களம் திரும்பி உலக போட்டியில் இரட்டை தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளார்.