மாவட்ட மகளிர் கைப்பந்து: தெற்கு ரெயில்வே அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் கீதாதேவி ரதி நினைவுக்கோப்பைக்கான ஆண்கள் ‘பி’ டிவிசன் மற்றும் மகளிருக்கான மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
மகளிர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே அணி 25-10, 25-14 என்ற நேர் செட்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. மற்ற ஆட்டங்களில் எஸ்.டி.ஏ.டி. 25-16, 20-25, 25-22 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு போலீசையும், கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் பெல்லோஷிப் 25-5, 25-14 என்ற நேர் செட்டில் சென்னை பிரண்ட்சையும் வீழ்த்தியது.
டாக்டர் சிவந்தி கிளப்புக்கு எதிராக ஆட இருந்த மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணி கடைசி நேரத்தில் விலகியது. இதனால் டாக்டர் சிவந்தி கிளப் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன் ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம் அகாடமி 26-24, 25-17, 25-22 என்ற செட் கணக்கில் ஜேப்பியார் பல்கலைக்கழகத்தை வென்றது. எஸ்.டி.ஏ.டி, ஜி.எஸ்.டி, லயோலா கல்லூரி அணிகளும் வெற்றி கண்டன.






