

* உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பட்டத்தை 11-வது முறையாக கைப்பற்றி அசத்தினார். அவர் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரபெல் நடால் அளித்த ஒரு பேட்டியில், உங்களை விட ஒருவரிடம் அதிக பணம் இருந்தாலோ? அல்லது உங்களை விட பெரிய வீடு வைத்து இருந்தாலோ? உங்களை விட அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருந்தாலோ? நீங்கள் ஒருபோதும் விரக்தி அடைய முடியாது. இதுபோன்ற நினைவுகளுடன் வாழ முடியாது. பெடரர் வென்று இருக்கும் பட்டத்தை கடக்க வேண்டும் என்பது எனது சிந்தனை கிடையாது. நான் விளையாட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன். எனது உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து ஆடுவேன். வயதுக்கு எதிராக போராட முடியாது. நான் வருங்காலம் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. டென்னிஸ் எனது வாழ்க்கையில் முக்கியமான அங்கம் தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் டென்னிஸ் தான் எனக்கு எல்லாம் என்று கிடையாது. நான் எல்லா இடங்களிலும் விளையாட விரும்புகிறேன். எனது உடல் நிலை குறித்து சில நாட்கள் சிந்தித்து தான் விம்பிள்டன் போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்வேன் என்று தெரிவித்தார்.