முன்னணி நாடுகள் விலகல் எதிரொலி: தாமஸ்-உபேர் பேட்மிண்டன் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு

முன்னணி நாடுகள் விலகல் எதிரொலியாக தாமஸ்-உபேர் பேட்மிண்டன் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
முன்னணி நாடுகள் விலகல் எதிரொலி: தாமஸ்-உபேர் பேட்மிண்டன் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு
Published on

புதுடெல்லி,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான இந்திய அணியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தனர். இதற்கிடையே கொரோனா அச்சத்தால் ஆஸ்திரேலியா, தென்கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், சீனதைபே போன்ற நாடுகள் தாமஸ்-உபேர் போட்டியில் இருந்து விலகின. கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த போட்டி நடப்பது பாதுகாப்பானது தானா? என்று சாய்னாவும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் முன்னணி நாடுகள் விலகல் எதிரொலியாக தாமஸ்-உபேர் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த ஆண்டில் இந்த போட்டியை நடத்துவதற்கு ஏற்ற சாத்தியமான மாற்று தேதி இல்லாததால் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டென்மார்க் ஓபன் போட்டியை ஓடென்ஸ் நகரில் திட்டமிட்டபடி அக்டோபர் 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com