40 வயதானாலும் எனது ஆட்டத்திறன் மேம்படுகிறது - சரத் கமல் பேட்டி

40 வயதானாலும் எனது ஆட்ட திறன் மேம்பட்டு வருகிறது என்று காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்ற சரத் கமல் கூறியுள்ளார்.
40 வயதானாலும் எனது ஆட்டத்திறன் மேம்படுகிறது - சரத் கமல் பேட்டி
Published on

சென்னை,

72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் களம் இறங்கிய உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சரத் கமல் ஆண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் இந்த காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கத்தை அள்ளிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். காமன்வெல்த் போட்டிகளில் 5-வது முறையாக கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த 40 வயதான சரத் கமல் இதுவரை மொத்தம் 13 பதக்கங்கள் வென்று இருக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டை நடத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்த சரத் கமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் படித்த பள்ளி சார்பில் தாமரை மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சரத் கமல் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நான் 3 தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் வென்றேன். காமன்வெல்த் விளையாட்டில் என்னுடைய மிகச்சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இரண்டு தங்கப்பதக்கம் வென்றதே சிறப்பானதாக இருந்தது. இந்த முறை நான் 3 தங்கம், ஒரு வெள்ளி என 4 பதக்கங்கள் வென்று இருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இதற்கு முன்னர் டேபிள் டென்னிசில் இதுபோல் யாரும் சாதித்ததில்லை. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நல்ல சாதனைக்கு கிடைத்த இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. என்மீது நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கும், அளிக்கும் ஆதரவுக்கும் ஏற்ப வருங்கால போட்டிகளிலும் நன்றாக செயல்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன்.

ஒற்றையர் பிரிவில் அரைஇறுதியில் வென்ற பிறகு எனது நம்பிக்கை அதிகரித்தது. இறுதிப்போட்டியில் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீரர் லியான் பிட்ச்போர்டுவை சந்தித்தேன். முதல் செட்டில் சற்று பதற்றம் அடைந்ததால் அந்த செட்டை இழந்தேன். அடுத்த 2 செட்களை கைப்பற்றிய பிறகு ஆட்டம் எனது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து வீரரை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தியது சிறப்பானது. இங்கிலாந்து வீரருக்கு இணையாக அங்குள்ள இந்தியர்கள் எனக்கு ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தினர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) விளையாட்டு கொள்கை இந்தியாவில் சிறந்த விளையாட்டு கொள்கைகளில் ஒன்றாகும். நமது மாநிலத்தின் விளையாட்டு திட்டங்களை கேட்டறிந்து பிற மாநிலங்கள் இதனை பின்பற்றி வருகின்றன. பெரிய வீரராக உருவெடுக்கும் முன்பே நமது வீரர்களை அடையாளம் கண்டு பல்வேறு திட்டங்கள் மூலம் சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ள எஸ்.டி.ஏ.டி. பல்வேறு உதவிகளை செய்கிறது.

அத்துடன் தமிழக அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதே மாதிரி ஆதரவை தொடருவதுடன் பெரிய ஸ்டேடியங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தால் மேலும் விளையாட்டு வளர்ச்சி அடையும். வெளிநாடு சென்று பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கவும் அரசு ஆதரவு அளித்து வருகிறது. விளையாட்டை தொழில்முறையாக எடுத்து கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்.

விளையாட்டை விட படிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் என்னுடன் விளையாடிய என்னை விட சிறந்த வீரர்கள் கூட விளையாட்டை விட்டு பாதியில் விலகி விட்டனர். எல்லோரும் விளையாட்டில் ஈடுபட வேண்டியது முக்கியமானதாகும். அதிகம் பேர் விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் நிறைய சாம்பியன்கள் உருவாகுவார்கள். தமிழகத்தில் டேபிள் டென்னிஸ் ஆட்டம் வலுவாக இருக்கிறது. காயம் அதிகம் ஏற்படாத விளையாட்டான இதில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் சாதிக்கலாம். எங்களுடைய வெற்றி டேபிள் டென்னிசை மேலும் பிரபலப்படுத்துவதுடன், இந்த ஆட்டத்தின் மீது வீரர்களின் கவனத்தை திருப்பும் என்று நம்புகிறேன்.

என்னை பொறுத்தமட்டில் சாதிக்க வயது ஒரு பிரச்சினையில்லை. வயது அதிகரிக்க, அதிகரிக்க எனது ஆட்டம் மெருகேறி கொண்டு வருகிறது. விளையாட்டு வீரருக்கு உடல் தகுதி முக்கியமானதாகும். நான் உடல் தகுதியை தொடர்ந்து நல்ல நிலையில் வைத்து இருக்கிறேன். இதற்காக உடல் தகுதி மற்றும் மனஉறுதிக்கு தனித்தனியாக பயிற்சி எடுத்து வருவதுடன், எத்தகைய உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையின் படி செயல்பட்டு வருகிறேன். உடல் தகுதியை சரியாக பேணுவதால் தான் என்னால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிகிறது.

இவ்வாறு சரத் கமல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com