

அபுதாபி,
பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் தங்களது மின்னல் வேகத்தை காட்டுகிறார்கள். இதுவரை நடந்துள்ள 21 சுற்று முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி), நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) தலா 369.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 22-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் ஓடுதளத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. பந்தய தூரம் 306.183 கிலோமீட்டர் ஆகும்.
டாப்-10 இடத்திற்குள் வருபவர்களுக்கு மட்டுமே புள்ளி வழங்கப்படும். முதலாவது வந்தால் 25 புள்ளி, 2-வது வந்தால் 18 புள்ளி, 3-வது இடத்துக்கு 15 புள்ளி வீதம் வழங்கப்படும். எனவே இருவரில் யார் முந்துகிறார்களோ அவர்களையே உலக பார்முலா1 கார்பந்தய சாம்பியன்ஷிப் மகுடம் அலங்கரிக்கும். 36 வயதான ஹாமில்டன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்தால், அது அவரது 8-வது பட்டமாக அமையும்.
அத்துடன் பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் அதிக பட்டம் வென்றவரான ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் சூமாக்கரின் (7 முறை சாம்பியன்) சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்து விடுவார். 24 வயதான வெர்ஸ்டப்பென் வாகை சூடினால், அது அவரது முதலாவது பட்டமாக இருக்கும். ஒரு வேளை இன்றைய பந்தயத்தில் இருவருமே புள்ளிகளை பெறாத வகையில் 10-வது இடத்துக்கு கீழ் வந்தால் இந்த சீசனில் அதிக வெற்றிகளை குவித்ததன் அடிப்படையில் வெர்ஸ்டப்பென் (9 வெற்றி) பட்டத்தை சொந்தமாக்குவார். ஹாமில்டன் இந்த சீசனில் 8 வெற்றிகளே பெற்றிருக்கிறார்.
நேற்று நடந்த தகுதி சுற்றில் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்ததால் இன்றைய ரேசில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும். ஹாமில்டனின் கார் 2-வது வரிசையில் இருந்து சீறும். களத்தில் கடுமையாக வரிந்து கட்டும் இருவரில் யாருடைய கை ஓங்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.