பிரீஸ்டைல் சர்வதேச செஸ்: அரையிறுதியில் அர்ஜுன் எரிகைசி தோல்வி

கோப்புப்படம்
பிரீஸ்டைஸ் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
லாஸ் வேகாஸ்,
கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடரின் ஒரு அங்கமான பிரீஸ்டைஸ் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இதில் முதல் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜுன் எரிகைசி 39-வது காய் நகர்த்தலில் அரோனியனிடம் தோல்வி கண்டார்.
ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த எரிகைசி தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தாலே வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையில் களம் கண்ட அரோனியன் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் ஆடிய எரிகைசி ரிஸ்க் எடுத்து ஆடி 50-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.
முடிவில் லெவோன் அரோனியன் 2-0 என்ற புள்ளி கணக்கில் எரிகைசியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அர்ஜுன் எரிகைசி அதற்கு மேல் முன்னேற முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மோக் நிமேன் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டு வீரர் பாபியனோ கருனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் லெவோன் அரோனியன்-ஹான்ஸ் மோக் நிமேன் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
3 முதல் 8-வது இடங்களுக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமெரை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஜவோகிர் சிந்தாரோவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தினார்.






