கேலோ இந்தியா விளையாட்டு: பதக்கபட்டியலில் தமிழ்நாடு 2-வது இடம்

தமிழ்நாடு 25 தங்கம் உள்பட மொத்தம் 60 பதக்கங்களை குவித்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு: பதக்கபட்டியலில் தமிழ்நாடு 2-வது இடம்
Published on

சென்னை, 

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.

7-வது நாளான நேற்று தடகளத்தில் தமிழகம் பதக்கங்களை குவித்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஆயிரம் மீட்டர் தொடர் ஓட்டத்தில் கோகுல் பாண்டியன், சரண், ஆன்டன் சஞ்சய், நித்ய பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தமிழக அணி 1 நிமிடம் 55.49 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

மேலும் இதன் பெண்கள் பிரிவிலும் தமிழக அணியே வெற்றி பெற்றது. தேசிகா, அக்சிலின், அன்சிலின், அபினயா ஆகியோரை கொண்ட தமிழக குழுவினர் 2 நிமிடம் 13.96 வினாடிகளில் முதலிடத்தை பிடித்தனர்.

பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் அலிஸ் தேவபிரசன்னா 1.66 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தையும், மற்றொரு தமிழக வீராங்கனை பிருந்தா வெள்ளிப்பதக்கம் (1.63 மீட்டர்) பெற்றார்.

டிரிபிள் ஜம்பில் சென்னை வீரர் ரவி பிரகாஷ் தங்கப்பதக்கத்தையும், மற்றொரு தமிழக வீரர் யுவராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

200 மீட்டர் ஓட்டத்தில் சென்னை வீரர் கோகுல் பாண்டியனும், பெண்கள் பிரிவில் நெல்லை வீராங்கனை அபினயாவும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். நேற்றுடன் தடகள போட்டிகள் நிறைவடைந்தது. தடகளத்தில் மட்டும் தமிழகம் மொத்தம் 11 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை ஆண்கள் பிரிவில் ஹிதேசும்,பெண்கள் பிரிவில் மெல்வினா ஏஞ்சலினாவும் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 86-85 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. பெண்கள் பிரிவில் தமிழகம் 70-60 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து மகுடம் சூடியது.

பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 25 தங்கம் உள்பட மொத்தம் 60 பதக்கங்கள் குவித்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில மராட்டியம் உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com