

சான் பிரான்சிஸ்கோ,
டபிள்யூ.என்.பி.ஏ. இறுதிப்போட்டித் தொடரின் 7-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அட்லாண்டா டிரீம் அணியை 68-63 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, கோல்டன் ஸ்டேட் வால்கைரீஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சேஸ் சென்டர் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதும் கோல்டன் ஸ்டேட் அணி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், அதன்பிறகு சிறப்பாக விளையாடிய அட்லாண்டா டிரீம் அணி புள்ளிகளைக் குவித்து முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டம் முடிவில் அட்லாண்டா அணி 30-24 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் அதிரடிக்கு திரும்பிய கேபி வில்லியம்ஸ், ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் மட்டும் 15 புள்ளிகளைக் குவித்தார். இதனால் அந்தப் பகுதியில் 17-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஆதிக்கம் செலுத்திய வால்கைரீஸ் அணி, 45-44 என முன்னிலை பெற்றது.
இதனால் கடைசி பாதியில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்தபோது, சுமார் 31 அடி தூரத்திலிருந்து கேபி வில்லியம்ஸ் பந்தை கூடைக்குள் செலுத்தி 3 புள்ளிகளைப் பெற்றார். இது வால்கைரீஸ் அணியின் வெற்றிக்கு முக்கியத் திருப்பமாக அமைந்தது.
இறுதியில், கோல்டன் ஸ்டேட் வால்கைரீஸ் அணி 68-63 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக டபில்யூ என் பி ஏ சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம், வட அமெரிக்காவின் முக்கிய விளையாட்டுத் தொடர்களில் பங்கேற்கும் புதிய அணிகளில், மிகக் குறுகிய காலத்திலேயே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக கோல்டன் ஸ்டேட் வால்கைரீஸ் இடம்பிடித்துள்ளது. அந்த அணி தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளது.
வால்கைரீஸ் அணியின் வெற்றிக்கு கேபி வில்லியம்ஸ் முக்கியக் காரணமாக இருந்தார். அவர் மொத்தம் 30 புள்ளிகளைக் குவித்து அசத்தினார். இதில் 28 புள்ளிகளை ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மட்டும் எடுத்தார்.
இதன் மூலம், டபிள்யூ.என்.பி.ஏ. இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரே பாதியில் அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். மேலும், இறுதிப்போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் (Finals MVP) தட்டிச் சென்றார்.