பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் ஒருவர்: வினேஷ் போகத்

உத்தர பிரதேசத்தில் வரும் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறவுள்ள தேசிய ஓபன் தரவரிசை போட்டி தொடரில் விளையாட போகத் ஆர்வத்துடன் உள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் ஒருவர்:  வினேஷ் போகத்
Published on

புதுடெல்லி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். 12 ஆண்டுகளாக அந்த பதவியை வகித்த, முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யான அவருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதன்பின்னர், அதே ஆண்டின் ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதுபற்றி, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. எனினும், இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், சரண் சிங்குக்கு எதிராக 3 மாதங்களுக்கு பின்னர், ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், சரண் சிங்குக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு பற்றிய விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து, போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, அவர்களுக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.

அப்போது நடந்த இந்த போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, அப்போது மத்திய விளையாட்டு துறை மந்திரியான அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்த சூழலில், போகத் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்ட நபரின் கண்ணியம் மற்றும் கவுரவம் ஆகியவற்றை முன்னிட்டு, அவருடைய அடையாளம் வெளியிடப்பட கூடாது என சுப்ரீம் கோர்ட்டு வழிமுறைகள் கூறுகின்றன. ஆனால், சில சூழ்நிலைகளால், உங்களிடம் சில விசயங்களை கூற விரும்புகிறேன்.

வழக்கு விசாரணையில் உள்ளபோது, நான் பேச விரும்பவில்லை. ஆனால், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் ஒருவர் என கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் வாக்குமூலம் அளித்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது என வினேஷ் போகத் தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கோண்டாவில் வரும் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறவுள்ள தேசிய ஓபன் தரவரிசை போட்டி தொடரில் விளையாட போகத் ஆர்வத்துடன் உள்ளார்.

எனினும், பூஷணின் வீட்டுக்கு, கல்லூரிக்கு (போட்டியில் பங்கேற்க) செல்லும்போது, மனதளவில் எங்களுக்கு நெருக்கடிகள் இருக்கும். நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என எங்கள் அணியும், ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது.

ஆனால், இதுபோன்ற நெருக்கடியான சூழலில், 100 சதவீதம் என்னுடைய திறமையை நான் வெளிப்படுத்த முடியும் என நினைக்க முடியவில்லை. ஒரு பெண்ணாக அது எனக்கு கடினம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று போகத் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com