

ஐதராபாத்,
26-வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் இறுதிப்போட்டியில் விளையாடினர்.
இந்த போட்டியில், கியான் 21.15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி பட்டம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கிடாம்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிப்பதக்கம் வென்ற பின் அளித்த பேட்டியில் ஸ்ரீகாந்த் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காவிட்டால் உலகமே முடிந்து போனதாக அர்த்தம் அல்ல. அடுத்து வரும் இங்கிலாந்து ஓபன் தொடர், காமன்வெல்த் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போகிறேன். கடந்த காலங்களில் செய்த தவறை திருத்திக் கொள்ள உள்ளேன்.
இன்னும் சிறப்பான வீரராக மேம்பாடு அடைவதற்காக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று 28 வயதான ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.