2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன்; ஆனால்... பிரிஜ் பூஷண் சிங் பேட்டி

2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டதற்காக அரசியல் பணியை தொடர்கிறேன் என பிரிஜ் பூஷண் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன்; ஆனால்... பிரிஜ் பூஷண் சிங் பேட்டி
Published on

கோண்டா,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவருக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இந்த போராட்டத்தின்போது, சமீபத்தில் குடிபோதையில் டெல்லி போலீசார் அவர்களை தாக்கினர் என்றும் அதனால், மல்யுத்த வீராங்கனையின் சகோதரர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், இதனை டெல்லி போலீசார் மறுத்தனர்.

இதன்பின் சுப்ரீம் கோர்ட்டில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு பற்றிய விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் தொடரும். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறினர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் 12 ஆண்டுகளாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவியில் இருப்பதுடன், பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்தது. இதன்படி, அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

டெல்லியில் நடைபெறும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் வருகிற ஜூன் 5-ந்தேதி சேத்னா மகா பேரணி நடைபெற உள்ளது. இதற்கான மக்கள் ஆதரவை பெறுவதற்காக பிரிஜ் பூஷண் டெல்லியில் இருந்து கோண்டா நகருக்கு வந்துள்ளார். கெய்சர்கஞ்ச் தொகுதியை சேர்ந்த மக்களவை எம்.பி.யான அவர், தனது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை சந்திக்கிறார்.

2014-ம் ஆண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன் என்று கூறிய அவர், ஆனால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, என்னை ஓய்வு பெற விடவில்லை. அவர் கேட்டு கொண்டதற்காக அரசியல் பணியை தொடர்கிறேன் என கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொய்களை பேச வேண்டும் என சிலர் முடிவு செய்து விட்டால், பின்னர் அதனை அவர்கள் செய்து விட்டு போகட்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com