'90 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும் என்று நினைத்தேன்; ஆனால்...' - உலக தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேட்டி

நாட்டுக்காக மேலும் பதக்கங்களை வெல்ல தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்று உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
நீரஜ் சோப்ரா (image courtesy: Narendra Modi twitter via ANI)
நீரஜ் சோப்ரா (image courtesy: Narendra Modi twitter via ANI)
Published on

புடாபெஸ்ட்,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதி சுற்றில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, டி.பி.மனு, கிஷோர்குமார் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.

இதில் எதிர்பார்த்தபடி ஒலிம்பிக் சாம்பியனான இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக தனது 2-வது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். முதல் வாய்ப்பை 'பவுல்' செய்த அவர் கடைசி 4 வாய்ப்புகளில் முறையே 86.32, 84.64, 87.73, 83.98 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், செக்குடியரசு வீரர் ஜாகுப் வாட்லெஜ் (86.67 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்திய வீரர்கள் கிஷோர் குமார் (84.77 மீட்டர்) 5-வது இடமும், டி.பி.மனு (84.14 மீட்டர்) 6-வது இடமும் பெற்றனர்.

இதன் மூலம் 40 ஆண்டு கால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை 25 வயது நீரஜ் சோப்ரா படைத்தார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும், 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் கேரள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தனர்.

அரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு, 2022-ம் ஆண்டு டைமண்ட் லீக், 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப், 2017-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் ஏற்கனவே பட்டம் வென்று இருந்தார். எஞ்சியிருந்த உலக சாம்பியன்ஷிப்பிலும் மகுடம் சூடி எல்லா பெரிய போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து முழுமையான வீரராக உருவெடுத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மற்றும் உலக போட்டி ஆகிய இரண்டிலும் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கிய 2-வது இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 2008-ம் ஆண்டு ஒலிம்பிக், 2006-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் வென்று சாதித்து இருந்தார்.

புதிய சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த போட்டியை பார்ப்பதற்காக நள்ளிரவிலும் கண்விழித்திருந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் வென்ற இந்த தங்கப்பதக்கம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது. ஒலிம்பிக் சாம்பியனான நான் தற்போது உலக சாம்பியனாகி விட்டேன். எந்த துறையாக இருந்தாலும் அதில் தொடர்ந்து கடினமான உழைத்தால் சாதிக்க முடியும்.

எறிபவர்களுக்கு எல்லை என்பது கிடையாது என்பார்கள். அது தான் ஈட்டி எறிதலின் தாரகமந்திரம். அது தான் நமக்கு எப்போதும் உந்து சக்தியாகும். நான் நிறைய பதக்கம் வென்று இருக்கலாம். இருந்தாலும் மேலும், மேலும் அதிக தொலைவில் ஈட்டி எறிய வேண்டும் என்பது தான் எனது நோக்கமாகும்.

இந்த பதக்கங்களை வென்றதன் மூலம் நான் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் என்று நினைக்கக்கூடாது. எனது நாட்டுக்காக மென்மேலும் பதக்கங்களையும், வெற்றிகளையும் குவிக்க நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். அடுத்த முறை பதக்க மேடையில் மற்ற இந்தியர்களும் இணைந்தால் அது சிறப்பானதாக இருக்கும்.

இந்த வருடம் நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் பிரச்சினையை உருவாக்கி விட்டது. கடந்த ஆண்டில் 90 மீட்டர் தூரத்துக்கு நெருக்கமாக ஈட்டி எறிந்தேன். என்றாவது ஒருநாள் 90 மீட்டர் இலக்கை நிச்சயம் அடைவேன். ஆனால் அது எப்போது வரும் என்பது தெரியாது. அது குறித்து சிந்தித்து நெருக்கடியை உருவாக்க மாட்டேன். நான் 90 மீட்டர் தூரத்தை எட்டும் போது, அதனை நிலையாக வைத்து இருக்க முயற்சிப்பேன். கடினமாக உழைத்து வரும் நான் அந்த இலக்கை எப்போது எட்டுவேன் என்று காத்திருக்கிறேன்.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். எனது அந்த கனவு நிறைவேறி இருப்பது சிறப்பானதாகும். இது இந்தியாவுக்கு ஒரு சிறந்த உலக சாம்பியன்ஷிப்பாகும். எனது நாட்டுக்காக மற்றொரு பட்டத்தை வென்றதில் பெருமைப்படுகிறேன்.

2-வது இடம் பிடித்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடனான போட்டியை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் என்று சித்தரிப்பதை பார்த்தேன். ஆனால் சர்வதேச போட்டிகளை பொறுத்தமட்டில் எல்லா போட்டியாளர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய போட்டியாளர்கள் மிகவும் கடினமானவர்கள். அவர்களால் எந்த நேரத்திலும் எதையும் செய்ய முடியும். அர்ஷத் மட்டுமல்ல ஜாகுப் வாட்லெஜூம் அபாரமாக ஈட்டி எறியக்கூடியவர். கடைசி எறிதல் வரை ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் சிந்திக்க வேண்டும். முன்பு ஈட்டி எறிதலில் ஐரோப்பிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் தற்போது நாங்கள் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு பதக்கம் வெல்வது நமது நாடுகளுக்கு நல்லதாகும்.

உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லவில்லை என்று பலரும் கூறி வந்தனர். தற்போது அதை வென்று விட்டேன். ஆனாலும் இன்னும் நான் நிறைய விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. அதில் கவனம் செலுத்துவேன். எல்லா காலத்திலும் நான்தான் இந்தியாவின் சிறந்த தடகள வீரர் என்று ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை. அப்படி என்னை அழைக்க விரும்பினால், ஜேன் ஜெலன்சி (செக்குடியரசை சேர்ந்த ஜெலன்சி ஈட்டி எறிதலில் (98.48 மீட்டர்) உலக சாதனையாளர். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் தலா 3 முறை தங்கம் வென்று இருக்கிறார்) போல் நான் சாதித்து இருக்க வேண்டும்.

ஒலிம்பிக் போட்டி சிறப்பு வாய்ந்த ஒன்று. அதே நேரத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டி மிகப்பெரியதாகும். போட்டி வாரியாக பார்த்தால் உலக சாம்பியன்ஷிப் எப்போதும் ஒலிம்பிக்கை விட கடினமானதாகும். அனைத்து வீரர்களும் இதற்கு தயாராக வருகிறார்கள். இந்தியாவில் இருந்து பலர் இங்கு வந்திருந்தனர். உள்ளூர் மக்களின் ஆதரவும் அருமையாக இருந்தது. இதனால் இந்த வெற்றியை சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கிறேன். சக வீரர்கள் கிஷோர், மனு ஆகியோரும் நன்றாக செயல்பட்டனர்.

இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com