உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்: நீரஜ் சோப்ரா


உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்: நீரஜ் சோப்ரா
x
தினத்தந்தி 30 Aug 2025 3:15 AM IST (Updated: 30 Aug 2025 3:15 AM IST)
t-max-icont-min-icon

நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார்

சூரிச்,

டைமண்ட் லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்தது. இதன் இறுதி சுற்றான சூரிச் டைமண்ட் லீக் போட்டி சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இதில் ஈட்டி எறிதலில் இந்திய வீரரும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார்.ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தனது முதல் இரு முயற்சிகளில் முறையே 91.37, 91.51 மீட்டர் எறிந்து பிரமிக்க வைத்ததுடன், டைமண்ட் லீக் போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் . இதில் 91.51 மீட்டர் அவரது சிறந்த செயல்பாடாகவும் பதிவானது.

டைமண்ட் லீக் இறுதி சுற்றில் தொடர்ந்து 3-வது முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ள நீரஜ் சோப்ரா கூறுகையில்,

‘இன்று எனக்கு ஈட்டி எறியும் நேரம் சிறப்பாக அமையவில்லை. நான் ஓடிவந்த விதமும் திருப்திகரமாக இல்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ளது. அதில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

இந்த போட்டியில் நான் மோசமாக செயல்பட்டதாக நினைக்கவில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டி நெருங்குவதால், நான் இன்னும் சற்று அதிக தூரம் எறிந்திருக்க வேண்டும். எனக்கு சில விஷயங்கள் சாதகமாக இருந்தது. சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. ஆனாலும் சமாளித்து எனது கடைசி முயற்சியில் 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தேன். முதலிடம் பிடித்த ஜூலியனுக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 91 மீட்டர் தொலைவுக்கு எறிந்ததை பார்க்க நன்றாக இருந்தது. 3 வாரத்தில் நாங்கள் மீண்டும் மோத இருக்கிறோம். எனக்கு மேலும் பயிற்சி தேவை. இந்த பந்தயத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. குறிப்பிட்ட அந்த நாளை பொறுத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்’ என்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.

1 More update

Next Story