முந்தைய போட்டிகள் போன்றே அதே மாதிரியான திட்டமிடலுடன் கடைசி சுற்றை சந்திப்பேன் - குகேஷ் பேட்டி

கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் 13-வது சுற்றில் வெற்றி பெற்று 8½ புள்ளிகளுடன் தனியாக முதலிடம் வகிக்கிறார்.
டி குகேஷ் (image courtesy: International Chess Federation twitter via ANI)
டி குகேஷ் (image courtesy: International Chess Federation twitter via ANI)
Published on

டொரோன்டோ,

'பிடே' கேன்டிடேட் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த 13-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் டி.குகேஷ், பிரான்ஸ் நாட்டின் பிரோஜா அலிரெஜாவை (பிரான்ஸ்) சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 63-வது காய் நகர்த்தலில் அலிரெஜாவை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டார். நடப்பு தொடரில் அவர் ருசித்த 5-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் பேபியானா காருனா நீண்ட இழுபறியால் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 89-வது நகர்த்தலில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார். ஹிகரு நகமுரா (அமெரிக்கா)- இயான் நெபோம்நியாச்சி (ரஷியா) இடையிலான மற்றொரு முக்கியமான மோதல் 27-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் குகேஷ் 8 புள்ளிகளுடன் தனிநபராக முன்னிலையில் இருக்கிறார். நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

14-வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் நகருராவை கருப்புநிற காய்களுடன் சந்திக்கிறார். இதில் குகேஷ் வாகை சூடினால், கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற வீரர் என்ற பெருமையோடு உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்வார். மாறாக கடைசி சுற்றில் தோற்றால் வெளியேற வேண்டியது. டிரா செய்தால், நெபோம்நியாச்சி - பேபியானோ காருனா இடையிலான முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். இரு வீரர்கள் ஒரே புள்ளியுடன் சமநிலை உருவானால் வெற்றியாரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.

17 வயதான குகேஷ் சென்னையைச் சேர்ந்தவர். அவர் கூறுகையில், 'வயதை வைத்து எனக்கு போதுமான அனுபவம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதுவே எனக்கு கொஞ்சம் சாதகமாக உள்ளது. எனது வயதுக்கு இத்தகைய நீண்ட தொடரில் என்னால் எளிதாக கவனம் செலுத்த முடிகிறது. முந்தைய போட்டிகள் போன்றே அதே மாதிரியான திட்டமிடலுடன் கடைசி சுற்றை சந்திப்பேன். இது சிறந்த ஆட்டமாக இருக்கும் என்ற நம்புகிறேன்' என்றார்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஆர்.வைஷாலி 67-வது நகர்த்தலில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங்ஜி லீக்கு அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே முதலிட வாய்ப்பை இழந்து விட்ட வைஷாலி (6.5 புள்ளி) தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மற்ற 3 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது.

13-வது சுற்று முடிவில் சீனாவின் டான் ஜோங்யி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டிங்ஜி லீ 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ஜோங்யி தனது கடைசி சுற்றில் உக்ரைனின் அன்னா முசிசக்குடன் டிரா செய்தாலே போதும். முதலிடத்தை பிடித்து விடுவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com