

சென்னை,
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்தது.
இந்த காமன்வெல்த் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 40 வயதாகும் சரத் கமல் தற்போதும் கூட இளம் வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி குறித்து சரத் கமல் பேசியுள்ளார். இது குறித்து சரத் கமல் கூறுகையில், " என் இலக்குகளை என்னால் சரியாக நிர்ணயிக்க முடிகிறது. அது சரியான திசையில் செயல்பட எனக்கு உதவுகிறது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணிக்கு பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. முதலில் நாங்கள் தகுதி பெற முயற்சிப்போம்.
கடந்த முறை ஒலிம்பிக்கிற்கு அணியாக தகுதி பெறுவதை நாங்கள் தவறவிட்டோம், ஆனால் இப்போது எங்களுக்கு நல்ல வேகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த வேகத்துடன் தொடர்ந்து செயல்பட்டால் நாங்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று பதக்கங்களை வெல்வோம் என்று நம்புகிறேன். " என்றார்.