தேசிய தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை

தமிழக அணியினருக்கு,பாராட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் தமிழக அணி 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை வென்று குவித்தது. இதன் மூலம் ஆண்கள் (105 புள்ளி) மற்றும் பெண்கள் (90 புள்ளி) பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழக அணி 195 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் சொந்தமாக்கியது.
தமிழக வீரர்கள் தமிழரசு (100 மீட்டர் ஓட்டம்), விஷால் (400 மீட்டர் ஓட்டம்), ரீகன், கவுதம் (இருவரும் போல்வால்ட்), ஸ்டாலின் ஜோஸ்(டெக்கத்லான்), வீராங்கனைகள் தனலட்சுமி (100, 200 மீட்டர் ஓட்டம்), பரனிகா (போல்வால்ட்), கோபிகா (உயரம் தாண்டுதல்) ஆகியோர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக ஆண்கள் அணியும், 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக பெண்கள் அணியும் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்திய தமிழக அணியினருக்கு, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
தங்கப்பதக்கத்தை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், வெண்கலப்பதக்கம் பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டது. 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த டி.கே.விஷாலுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
முன்னதாக வாகை சூடிய தமிழக தடகள அணியினர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.






