பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 82 பதக்கங்கள் குவித்து சாதனை

பாரா ஆசிய விளையாட்டு தொடரின் 4-வது நாள் முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
Image Courtesy : @19thAGofficial
Image Courtesy : @19thAGofficial
Published on

ஹாங்சோவ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்றும் இந்தியாவின் பதக்க வேட்டை நீடித்தது. நேற்று 4 தங்கம் உள்பட 18 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் (எப் 46 பிரிவு) இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.03 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரர் 14.56 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் சித்தார்த்த பாபு 247.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் ஷீதல் தேவி-ராகேஷ் குமார் இணை 151-149 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் லின் யுஷான்-அய் ஜின்லாங் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அடில் முகமது நாசிர் அன்சாரி-நவீன் தலால் கூட்டணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

பெண்களுக்கான குண்டு எறிதலில் (எப் 34 பிரிவு) இந்திய வீராங்கனை பாக்யஸ்ரீ மாதவ்ராவ் ஜாதவும் (7.54 மீட்டர்), 100 மீட்டர் ஓட்டத்தில் சிம்ரனும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் நாராயணன் தாக்குர் (டி 35 பிரிவு), ஸ்ரீயான்ஷ் திரிவேதி (டி 37 பிரிவு) ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை பெற்றனர்.

பாரா ஆசிய விளையாட்டு வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த போட்டியில் 72 பதக்கங்கள் (15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம்) வென்றதே இந்தியாவின் சிறப்பான செயல்பாடாக இருந்தது. நடப்பு போட்டி தொடரில் 4-வது நாள் முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் (18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம்) குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இன்னும் 2 நாள் போட்டிகள் எஞ்சி இருப்பதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்சோவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு போதும் இல்லாத வகையில் இந்தியா 107 பதக்கங்களை (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்) அள்ளி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது நினைகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com