ஏ.வி.சி. கோப்பை வாலிபால்: பஹ்ரைனை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்ற இந்தியா

அரையிறுதியில் நூலிழையில் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா இழந்தது.
ஏ.வி.சி. கோப்பை வாலிபால்: பஹ்ரைனை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்ற இந்தியா
Published on

அகமதாபாத்,

ஏ.வி.சி. ஆண்கள் கோப்பை (AVC Men's Cup) வாலிபால் தொடரில், இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

இந்தியா-பஹ்ரைன்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏ.வி.சி. ஆண்கள் கோப்பை (AVC Men's Cup) வாலிபால் தொடரில், இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியனான பஹ்ரைன் அணியுடன் மோதியது.

வெற்றி

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் செட்டை 25-23 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, 2-வது செட்டை 23-25 என இழந்தது. அதன்பின்னர் கம்பேக் கொடுத்த இந்திய வீரர்கள், 3-வது செட்டை 25-21 மற்றும் 4-வது செட்டை 25-17 என்ற கணக்கில் வென்று 3-1 என்ற செட் கணக்கில் வெற்றியை உறுதி செய்தனர்.

அரையிறுதியில் தோல்வி

இதற்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆசியாவின் வலுவான அணிகளில் ஒன்றான இந்தோனேசியாவை இந்தியா எதிர்கொண்டது. ஐந்து செட்கள் வரை நீண்ட அந்த ஆட்டத்தில் இந்தியா 25-15, 24-26, 20-25, 25-19, 13-15 என்ற செட் கணக்கில் 2-3 என நூலிழையில் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

புதிய வரலாறு

அரையிறுதியில் ஏமாற்றம் அடைந்த போதிலும், மனம் தளராத இந்திய அணி, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியனான பஹ்ரைனை வீழ்த்தி, ஏ.வி.சி. ஆடவர் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com