தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 200 பதக்கங்களை தாண்டியது

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 200 பதக்கங்களுக்கு மேல் வென்று குவித்துள்ளது.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 200 பதக்கங்களை தாண்டியது
Published on

காத்மண்டு,

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் வழக்கம் போல் நேற்றும் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர். நேற்று ஒரேநாளில் இந்தியா 29 தங்கம் உள்பட 49 பதக்கங்களை சொந்தமாக்கியது.

நீச்சல் போட்டியில் இந்தியர்கள் ஸ்ரீஹரி நடராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), ரிசா மிஸ்ரா (800 மீட்டர் பிரீஸ்டைல்), சிவா (400 மீட்டர் தனிநபர் மெட்லி), மானா பட்டீல் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), சஹாத் அரோரா (50 மீட்டர் பேக்ஸ்டிரோக்), லிகித் (50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக்), ருஜூதா பத் (50 மீட்டர் பிரீஸ்டைல்) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். தமிழக வீராங்கனை ஜெயவீனா 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் சத்யவார்த் காடியன் (97 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), இந்திய வீராங்கனைகள் குர்ஷன்பிரீத் கவுர் (76 கிலோ), சரிதா மோர் (57 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர்.

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதேபிரிவில் அனிஷ் பன்வாலா, பாபேஷ் ஷெகாவத், ஆதர்ஷ்சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மெகுலி கோஷ்-யாஸ் வர்தன் ஜோடி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

பளுதூக்குதலில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீஸ்தி சிங் (81 கிலோ), அனுராதா (87 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்கள். இதில் அனுராதா தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

தடகள போட்டியில் இந்தியா மேலும் 7 பதக்கங்களை வென்றது. ஆனால் தங்கப்பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. இந்திய வீரர்கள் ராஷ்பால் சிங் (மாரத்தான்), முகமது அப்சல் (800 மீட்டர் ஓட்டம்), ஷிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இந்திய வீரர் ஷெர்சிங் (மாரத்தான்), இந்திய வீராங்கனைகள் ஜோதி கவாதே (மாரத்தான்), ஷர்மிளா குமாரி (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்தும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுனன்யா குருவில்லா, தன்வி ஹன்னா ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். இதன் மூலம் 3 பதக்கம் உறுதியாகி உள்ளது. குத்துச்சண்டை போட்டியில் வினோத் தன்வார் (49 கிலோ), கலைவாணி (48 கிலோ) உள்பட 7 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 214 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. போட்டியை நடத்தும் நேபாளம் 43 தங்கம், 34 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 142 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், இலங்கை 30 தங்கம், 57 வெள்ளி, 83 வெண்கலம் என மொத்தம் 170 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com