

புதுடெல்லி,
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்றில் விளையாடுவதற்கு தகுதியான இந்திய வீரர், வீராங்கனையான தேர்வு செய்வதற்கான போட்டிகள் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் விவரத்தை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி 51 கிலோ உடல் எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியன் மேரிகோம், நிகாத் ஜரின், ஜோதி, ரிது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டித்தரநிலையில் முதலிடத்தில் உள்ள 36 வயதான மேரிகோம், 4-ம் நிலை வீராங்கனை ரிதுவுடன் மோதுகிறார். தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நிகாத் ஜரின், ஜோதியை எதிர்கொள்கிறார். இரு ஆட்டங்களில் வெற்றி பெறுபவர்கள் இறுதி சுற்றில் சந்திப்பார்கள். அதில் வெற்றி காணுபவர் பிப்ரவரி மாதம் சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் தகுதி சுற்றான ஆசியா-ஓசியானியா குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பார். மற்ற எடைப்பிரிவினருக்கான தகுதி சுற்று போட்டியும் அன்றைய தினங்களில் நடக்க உள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான நிகாத் ஜரின், மேரிகோமுடன் தனக்கு தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறியதும், போட்டியை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதும் நினைவு கூரத்தக்கது.