இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராகிறார் பி.டி. உஷா

இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராகிறார் பி.டி. உஷா
Published on

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வருகிற டிசம்பர் 10-ந்தேதி நடக்கிறது. இவற்றில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா (வயது 58) கடந்த 26-ந்தேதி தனது விருப்பத்தினை வெளியிட்டார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என குறிப்பிட்டார். தலைவர் பதவிக்கு அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா குறிப்பிட்டு உள்ளார். வேறு எந்த பதவிகளுக்கும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை என்றும் சின்ஹா கூறினார். இதனால், போட்டியின்றி தலைவர் பதவிக்கு பி.டி. உஷா தேர்வாகும் நிலை காணப்பட்டது.

இந்த சூழலில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என மத்திய சட்ட மற்றும் நீதி துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தனது டுவிட்டர் வழியே தெரிவித்து உள்ளதுடன், தனது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

கவுரவமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நமது நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களால் நாடு பெருமை அடைகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். பி.டி. உஷா இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் தலைவராவார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

1986-ம் ஆண்டு நடந்த சியோல் ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 4 x 400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை தட்டி சென்றார்.

இதுதவிர, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். 1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடையோட்ட போட்டியில் 4-வது இடம் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com