இந்தியன் ஓபன் பாரா தடகளம்: சர்வீசஸ் வீரர் தர்மராஜூக்கு தங்கம்

கோப்புப்படம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 7-வது இந்தியன் ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் கடந்த 2 நாட்கள் நடந்தது.
பெங்களூரு,
மாற்றுத்திறனாளிகளுக்கான 7-வது இந்தியன் ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் (டி12) உத்தரபிரதேச வீராங்கனை சிம்ரன் 24.80 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
குஜராத்தின் தமோர் தேஜல் (25.80 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், ஒடிசாவின் ஜானகி ஓரம் (30.00 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர். மற்றொரு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் (டி35) உத்தரபிரதேசத்தின் பிரீத்தி 31.40 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கத்தையும், அரியானாவை சேர்ந்த அவானி (44.20 வினாடி) வெள்ளியையும், ராஜஸ்தான் வீராங்கனை சுனேத்ரா (58.50 வினாடி) வெண்கலத்தையும் வென்றனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (டி42, டி63) ராஜஸ்தானின் மகேந்திரா குர்ஜார் 5.73 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். இதே போல் டி44, டி64 பிரிவு நீளம் தாண்டுதலில் சர்வீசஸ் வீரரான தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் (7.32 மீட்டர்) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். வட்டு எறிதலில் (எப்37) அரியானாவின் ஹன்னி 53.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.






