

உலான் உடே,
ரஷ்யாவில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 54 கிலோ எடை பிரிவில் இறுதி-16 ஆட்டம் இன்று நடந்தது. காலிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு தகுதி பெறுவதற்காக நடைபெறும் இந்த போட்டியில், அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஒயிடாட் போ மற்றும் இந்திய வீராங்கனை ஜமுவா போரோ (வயது 22) விளையாடினர்.
தொடக்கத்தில் போரோ மெல்ல விளையாட தொடங்கினார். இதன்பின் 2வது மற்றும் 3வது சுற்றுகளில் இருவரும் கடுமையாக மோதி கொண்டனர். இதில் போட்டி செல்ல செல்ல தனது ஆதிக்கம் நிலை பெறும் வகையில் போரோ தெளிவாகவும், ஆக்ரோசமுடனும் விளையாடினார்.
ஆப்பிரிக்க விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றவரான ஒயிடாடை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி போரோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வருடம் நடந்த இந்திய ஓபன் போட்டியில் தங்கம் வென்றவரான போரோ, கடந்த 2015ம் ஆண்டு நடந்த இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார்.
அசாமை சேர்ந்தவரான போரோ அசாம் ரைபிள் படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் காய்கறி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு தனது மகளின் விளையாட்டு ஆர்வத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.