பாக்.அரசு மீது ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் குற்றச்சாட்டு

image courtesy:PTI
பாரீஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார்.
கராச்சி,
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனையடுத்து அதன் பின்னர், நதீமுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன. பாகிஸ்தான் அரசும் அவருக்கு பரிசுத்தொகை மற்றும் நிலம் வழங்குவதாக அறிவித்தது. அத்துடன் தனியார் நிறுவனங்களும் அர்ஷத் நதீமுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கின.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அறிவித்த நிலம் வழங்கப்படவில்லை என்று அர்ஷத் நதீம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வாக்குறுதிகள் போலியானவை என்றும் அவர் பாகிஸ்தான் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "எனக்கு ஏராளமான பரிசுகள் அளித்தார்கள் என்பது உண்மைதான். எனக்கு நிலம் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த வாக்குறுதிகள் போலியானவை. வாக்குறுதி அளித்தபடி எனக்கு நிலம் வழங்கப்படவில்லை. ஆனால், மற்ற அனைத்து பரிசுகளும் எனக்கு வழங்கப்பட்டன" என்று கூறினார்.






