கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், அனுபமா ஏமாற்றம்

கோப்புப்படம்
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென்கொரியாவில் உள்ள சுவோன் நகரில் நேற்று தொடங்கியது.
சுவோன்,
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென்கொரியாவில் உள்ள சுவோன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய், இந்தோனேசியாவின் சிகோ ஆரா டிவி வார்டோயோவை சந்தித்தார். முதலாவது செட்டில் 8-16 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது பிரனாய், விலா பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார்.
மற்றொரு ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் (இந்தியா) 14-21, 22-20, 14-21 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான லோக் கீன் யூவிடம் (சிங்கப்பூர்) போராடி பணிந்தார். ஆயுஷ் ஷெட்டி (இந்தியா) 18-21, 18-21 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சு லி யாங்கிடம் தோல்வியை தழுவினார்.
இதன் மகளிர் ஒற்றையரிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அனுபமா உபாத்யாயா 16-21, 15-21 என்ற செட் கணக்கில் புத்ரி வர்தானியிடம் (இந்தோனேசியா) வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மோகித் ஜாக்லான்- லக்ஷிதா ஜாக்லன் ஜோடி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இத்துடன் இந்த போட்டித் தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.






