கொரிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி
Published on

இன்சியான்,

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்திலேயே உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். சாய்னா உடல் நலக் குறைவாலும், சாய் பிரனீத் காயத்தாலும் போட்டியில் இருந்து பாதியில் விலகினார்கள்.

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்சியானில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கடந்த மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவரும், தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 11-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை பீவென் ஜாங்குடன் மோதினார்.

56 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிந்து 21-7 என்ற கணக்கில் தனதாக்கினார். பின்னர் சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்த பீவென் ஜாங் அடுத்த 2 செட்களையும் 24-22, 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது சுற்றில் சிந்து, பீவென் ஜாங்கை வீழ்த்தி இருந்தார். அதற்கு பீவென் ஜாங் பதிலடி கொடுத்து விட்டார். கடந்த வாரம் நடந்த சீன ஓபன் போட்டியில் சிந்து 2-வது சுற்றிலேயே நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 24-வது இடத்தில் உள்ள தென்கொரியாவின் கிம் கா அனை சந்தித்தார். இதில் சாய்னா நேவால் 21-19, 18-21, 1-8 என்ற கணக்கில் இருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிம் கா அன் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். சாய்னா விலகல் குறித்து அவருடைய கணவர் காஷ்யப் கருத்து தெரிவிக்கையில், முந்தைய நாளில் மயக்கமாக இருப்பதாக தெரிவித்த சாய்னா வாந்தியும் எடுத்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு தான் விளையாட வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவரால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. எனவே போட்டியில் இருந்து விலகினார். நாடு திரும்பியதும் மீண்டும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது உள்ளது. இந்த ஆண்டு அவருக்கு கடினமானதாக அமைந்துள்ளது என்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சாய் பிரனீத், டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்செனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 9-21, 7-11 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது, கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் ஆன்டர்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் 21-16, 21-16 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் லூ சியா ஹங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடிகள் தோல்வி கண்டு வெளியேறின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com