

புதுடெல்லி
பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள ஆடவர் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீரரான லக்சயா சென் நீண்ட நாட்களுக்கு பின்னர் டாப் 10-ல் இடம் பிடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மார்ச்சுக்கு பின்னர் அவர் இந்த பட்டியலில் இல்லாத சூழலில், 440 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அந்த இடத்திற்குள் வந்துள்ளார். இதற்காக, இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டது.
காமன்வெல்த் போட்டிகளின் சாம்பியன் மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறியவரான சென், சமீபத்தில் நடந்த தாமஸ் கோப்பை போட்டி தொடரில் இந்தியாவின் வெண்கலம் பதக்கம் வென்ற குழுவில் இடம் பெற்றவர்.
440 நாட்களாக காயங்களுடனும், அதில் இருந்து கஷ்டப்பட்டு மீள்வதிலும், பல போட்டிகளில் பின்னடைவையும் சந்தித்ததில் அவர் மனமுடைந்து போயிருக்க கூடும். ஆனால் இன்று மீண்டும் சாதனை பட்டியலுக்குள் திரும்பியுள்ளார். அவர் இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற கூடிய சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடுகிறார்.