‘மின்னல்வேக மனிதன்’ உசேன் போல்ட்

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் உசேன் போல்ட்.
‘மின்னல்வேக மனிதன்’ உசேன் போல்ட்
Published on

கரிபீயன் தீவில் அமைந்துள்ள ஜமைக்கா நாட்டை சேர்ந்த இவர் உலகின் மின்னல் வேக மனிதராக அழைக்கப்படுகிறார்.

குறுகிய தூர ஓட்டப்பந்தயத்தில் புயல்வேகத்தில் சீறும் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் (9.58 வினாடி), 200 மீட்டர் ஓட்டத்தில் (19.19 வினாடி) உலக சாதனை இலக்கை நிர்ணயித்து இருக்கிறார். இப்போதைக்கு அவரது சாதனையை யாரும் நெருங்க வாய்ப்பில்லை.

2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் மகுடம் சூடிய உசேன் போல்ட், 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக் ஆகியவற்றிலும் இவ்விரு பிரிவுகளிலும் கோலோச்சினார். இதன் மூலம் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்ட முதல் வீரர் என்ற மகத்தான பெருமை உசேன் போல்ட்டுக்கு கிடைத்தது. அத்துடன் ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இரண்டு முறை தங்கம் வென்று இருக்கிறார். தொடர் ஓட்டத்தில் 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும் உசேன் போல்ட் அடங்கிய ஜமைக்கா அணியே முதலிடம் பிடித்திருந்தது. ஆனால் அந்த அணியில் இடம் பெற்றிருந்த நெஸ்டா கர்ட்டர் ஊக்கமருந்து உட்கொண்டது சில ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்ததால் அந்த தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. இல்லாவிட்டால் உசேன் போல்ட்டின் ஒலிம்பிக் தங்கம் எண்ணிக்கை 9 ஆக இருந்திருக்கும். உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் 11 தங்கம் உள்பட 14 பதக்கங்களை வாரி குவித்து இருக்கும் உசேன் போல்ட் தடகள உலகின் மிகச்சிறந்த வீரராக அறியப்படுகிறார்.

வினாடிக்கு எவ்வளவு வேகத்தில் ஓடுகிறார். எவ்வளவு தூரத்துக்கு ஒரு அடியை எடுத்து வைக்கிறார், அவரது உடல் அமைப்பு, தசை பலம், ஓடுவதற்கு முன்பாக உடலை எந்த கோணத்தில் வைத்து இருக்கிறார் இப்படி அவரது வெற்றி ரகசியத்தை ஆராய்ந்த விளையாட்டு மற்றும் கணித நிபுணர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், களத்தில் இருக்கும் வரை நானே ராஜா என்பது தான் உசேன் போல்ட்டின் ஒரே தாரக மந்திரம். மனரீதியாக வலிமையுடன் இருந்தால் எதிலும் சாதிக்கலாம் என்பது மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அவர் சொல்லி தந்த பாடம். 99 சதவீதம் அதை நிறைவேற்றிய உசேன் போல்ட் 2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற ஏமாற்றத்தோடு தனது 30-வது வயதில் ஓய்வு பெற்றார்.

100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டின் ஓட்டத்தை தரிசிக்கவே கோடிக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். அந்த அளவுக்கு அவரது ஓட்டத்தை பார்க்க சிலிர்ப்பாகவும், திரில்லிங்காகவும் இருக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் இல்லையே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு நிச்சயம் இருக்கும். அது சரி, இந்த முறை 100 மீட்டர் ஓட்டத்தில் அதிவேக மனிதராக முடிசூடுவதற்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது. அதையும் உசேன் போல்ட் கணித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன். அமெரிக்காவின் டிரேவான் புரோமெல்லுக்கு இந்த ஒலிம்பிக்கில் சாம்பியன் ஆக அதிக வாய்ப்புள்ளது. அவரிடம் அபாரமான திறமை (உள்ளூரில் நடந்த போட்டியில் 9.77 வினாடியில் இலக்கை கடந்தார்) இருக்கிறது. அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். சில மோசமான காயங்களில் இருந்து மீண்டு வந்துள்ள அவரது ஓட்டத்தை ஒலிம்பிக்கில் காண்பதை எதிர்நோக்கி உள்ளேன் என்கிறார் உசேன் போல்ட்.

இன்னொரு விஷயம் தெரியுமா? தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி தடகள சக்ரவர்த்தியாக வலம் வந்த உசேன் போல்ட்டின் உண்மையான ஆசை கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்பது தான். தடகளத்தில் கால்பதித்திருக்காவிட்டால் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்திருப்பேன் என்று அடிக்கடி சொல்வார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com