

கோலாலம்பூர்,
மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சம் பரிசுத்தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 19-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்தித்தார்.
34 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-10, 21-15 என்ற நேர்செட்டில் அயா ஒஹோரியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஒஹோரியை, சிந்து தொடர்ச்சியாக 9-வது முறையாக தோற்கடித்தார். கால்இறுதியில் சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்கை (சீன தைபே) சந்திக்கிறார். இதுவரை இருவரும் 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். இதில் தாய் ஜூ யிங் 11 முறையும், சிந்து 5 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.