காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தீபிகா, ஜோஸ்னா, சரத்கமலுக்கு உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் போட்டியைப்போல் ஆசிய போட்டியிலும் சாதிப்போம் என சென்னை திரும்பிய தீபிகா, ஜோஸ்னா, சரத்கமல் ஆகியோர் கூறினர்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தீபிகா, ஜோஸ்னா, சரத்கமலுக்கு உற்சாக வரவேற்பு
Published on

சென்னை,

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் தீபிகா, ஜோஸ்னா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் ஆகியோருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். தீபிகா பலிக்கல், சக நாட்டு வீரர் சவுரவ் கோஷலுடன் இணைந்து கலப்பு இரட்டையரிலும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி அசத்தினார்.

நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிய தீபிகா, ஜோஸ்னாவுக்கு விமான நிலையத்தில், ஸ்குவாஷ் சங்கத்தினரும், ரசிகர்களும் பூங்கொத்து வழங்கி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து, தேசிய பயிற்சியாளர் சைப்ரஸ் போஞ்சா ஆகியோரும் வந்திருந்தனர்.

பின்னர் ஜோஸ்னா நிருபர்களிடம் கூறுகையில், 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் நாங்கள் தங்கப்பதக்கம் வென்றோம். அதன் பிறகு அடுத்த 4 ஆண்டுகளில் ஸ்குவாஷில் நிறைய நடந்து விட்டன. பதக்கமேடையில் ஏற வேண்டும் என்ற எங்களது இலக்கு மீண்டும் ஒரு முறை நிறைவேறி இருக்கிறது. அதுவே எங்களுக்கு ஆத்ம திருப்தி தான். இப்படியொரு வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. உண்மையிலேயே எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது. இந்தோனேஷியாவில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியே அடுத்து எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். அதற்கு தயாராவதற்கு கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. என்றார்.

தீபிகா பலிக்கல் கூறும் போது, ஏமாற்றம் இன்றி பதக்கத்தோடு திரும்பியதே மனநிறைவு தருகிறது. இருப்பினும் நியூசிலாந்து ஜோடிக்கு எதிரான இறுதிசுற்றில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்றார்.

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத்கமல் 3 பதக்கங்கள் (அணி பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, தனிநபர் பிரிவில் வெண்கலம்) வென்று பிரமாதப்படுத்தினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் சார்பில் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

35 வயதான சரத்கமல் கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் நான் வென்ற மூன்று பதக்கங்களை என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு சமர்ப்பிக்கிறேன். டேபிள் டென்னிஸ் பயிற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நன்கு ஊக்கம் அளிக்கின்றன. இதே போல் உதவிகள் தொடர்ந்தால், ஒலிம்பிக்கிலும் சாதிக்க முடியும். விடா முயற்சியோடு கடுமையாக உழைத்தால் வெற்றி சாத்தியமே.

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஏப்.29 முதல் மே 6) பங்கேற்பதற்காக அடுத்த வாரம் சுவீடனுக்கு செல்ல இருக்கிறோம். தற்போது நான் தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ளேன். உலக போட்டியில் நன்றாக செயல்பட்டால், தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் நாம் இதுவரை பதக்கம் வென்றது கிடையாது. இந்த முறை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com