மீராபாய் சானு: சாதனை மங்கை கடந்து வந்த பாதை

மீராபாய் சானு....நேற்றைய தினம் இந்திய ரசிகர்களால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் இது தான். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்றுத்தந்து சரித்திர நாயகியாக உருவெடுத்துள்ள மீராபாய் சானு பல சோதனைகளை கடந்தே இந்த நிலைக்கு முன்னேறி இருக்கிறார்.
மீராபாய் சானு: சாதனை மங்கை கடந்து வந்த பாதை
Published on

சொந்த ஊர் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் என்ற கிராமம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உடன் பிறந்த 6 பேரில் கடைக்குட்டி.சிறு வயதில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் காட்டில் மீராபாய் சானு தனது சகோதரருடன் சென்று சமையலுக்கும், தனது தாயார் நடத்திய டீ கடைக்கும் தேவையான விறகுகட்டைகளை பொறுக்கி வருவது வழக்கம். அவரது அண்ணனை விட அதிக எடையிலான விறகு கட்டைகளை சுமந்து வந்து ஆச்சரியப்படுத்துவாராம். இது தான் அவரது பளுதூக்குதலுக்கு அச்சாரம் என்றே சொல்லலாம்.அப்போது அவருக்கு 9 வயது இருக்கும். 2004-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மணிப்பூரைச் சேர்ந்த குஞ்சராணி தேவி பளுதூக்குதலில் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டார். அதை டி.வி. சேனலில் பார்த்துக் கொண்டிருந்த மீராபாய் சானுவுக்கு பளுதூக்குதலில் ஆர்வம் பிறந்தது என்கிறார் அவரது தாயார் சாய்கோம் தோம்பி. அந்த போட்டி முடிந்ததும் வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கம்பை தலைக்கு மேல் தூக்கி விளையாடினார் என்கிறார் அவர்.

ஆரம்பத்தில் தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்துக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் அதன் பிறகு இம்பாலில் உள்ள மையத்துக்கு சென்று பயிற்சியை தொடங்கினார். பளுதூக்குதலில் உடலை வலுப்படுத்த சத்தான உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியலில் அரைலிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்று இருக்கும். ஆனால் வாரம் ஒரு முறை ஆரோக்கியமான உணவு தரவே எனது குடும்பத்தினர் தங்கள் தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை இருந்தது என்று ஒரு முறை மீராபாய் கூறியிருக்கிறார்.

மனஉறுதியோடு தனது லட்சிய பயணத்தை தொடங்கிய மீராபாய் சானுவுக்கு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பெருத்தஅடி விழுந்தது. அதில் சரியாக எடையை தூக்க முடியாமல் தள்ளாடினார். கண்ணீர் விட்டார். மனம் உடைந்து போன அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று கூட நினைத்தார். அவரது குடும்பத்தினர், பயிற்சியாளர் அவரை ஊக்கப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு எழுச்சி பெற்ற அவர் 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடினார். 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கப்பதக்கத்தை வென்றார்.அதன் தொடர்ச்சியாக இப்போது ஒலிம்பிக்கிலும் மின்னியிருக்கிறார். அவரது போட்டியை வீட்டில் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் பதக்கம் வென்றதும் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியில் கொண்டாடினர். உணர்ச்சி வசப்பட்ட அவரது தாயாரின் கண்கள் குளமாகின.

மீராபாய் நான் வாங்கி கொடுத்த ஒலிம்பிக் வளைய வடிவிலான காதணியை அணிந்திருப்பதை டி.வி.யில் பார்த்தேன். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்குக்கு முன்பாக எனது சேமிப்பில் வாங்கி கொடுத்தது. அவர் அதை அணிந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. அவர் பதக்கம் வென்ற காட்சிகளை கண்டு எனக்கும், எனது கணவருக்கும் கண்கள் கலங்கின என்று மீராபாய் சானுவின் தாயார் சாய்கோம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com