தேசிய தடகள போட்டி: 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு தங்கப்பதக்கம்

கோப்புப்படம்
தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியின் 4-வது நாளான நேற்று நடந்த மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமி 23.53 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். அவர் திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் பஞ்சாப்பின் ரமன்தீப் கவுர் (58.90 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழத்தின் ஒலிம்பா ஸ்டெபி (59.21 வினாடி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை ஷெரின் (6.16 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார். மேற்கு வங்காளத்தின் மவுமிதா மோண்டல் (6.27 மீட்டர்) தங்கப்பதக்கமும், உத்தபிரதேசத்தின் ஷைலி சிங் (6.18 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
ஈட்டி எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை அன்னு ராணியும் (61.05 மீட்டர்), வட்டு எறிதலில் அரியானாவின் சீமாவும் (57.18 மீட்டர்) முதலிடம் பிடித்தனர். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ஆதர்ஷ் ராம் (2.21 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மராட்டியத்தின் சர்வேஷ் குஷாரே (2.24 மீட்டர்) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ராகுல் குமார் (20.92 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.






