

சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மராட்டியத்தின் தேஜஸ் ஷிர்ஸ் தங்கப்பதக்கமும் (13.60 வினாடி), தமிழகத்தின் மனவ் வெள்ளிப்பதக்கமும் (14.03 வினாடி) வென்றனர்.
மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. சென்னையை சேர்ந்த நந்தினி 13.45 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்தார். மேற்கு வங்காளத்தின் மவுமிதா மோண்டல் தங்க மங்கையாக (13.22 வினாடி) ஜொலித்தார்.
இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது. மகளிருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பவித்ரா, ஏஞ்சல் சில்வியா, அபினயா, தனலட்சுமி ஆகியோர் அடங்கிய தமிழக அணியினர் 44.73 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டிப்பிடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.
கர்நாடகா வெள்ளிப்பதக்கத்தை (45.34 வினாடி) வசப்படுத்தியது. இதன் ஆண்கள் பிரிவில் ஒடிசாவிடம் பின்தங்கிய அருண், ராகுல் குமார், வருண் மனோகர், தமிழரசு ஆகியோரை கொண்ட தமிழக அணியினர் 2-வது இடம் (39.80 வினாடி)பிடித்தனர். 4x400 மீட்டர் கலப்புதொடர் ஓட்டத்தில் தமிழகம் வெண்கலம் பெற்றது.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் டாப்-2 இடங்களை கேரளாவின் கார்த்திக், அப்துல்லா அபூபக்கர் பிடித்த நிலையில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 16.35 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஆண்கள் பிரிவில் கேரளாவின் பிலின் ஜார்ஜ் ஆண்டோவும் (1 மணி 29 நிமிடம் 35.12 வினாடி). மகளிர் பிரிவில் அரியானாவின் ரவினாவும் (1 மணி 35 நிமிடம் 13.49 வினாடி) மகுடம் சூடினர். தமிழகத்தின் மோகவி முத்துரதினா வெண்கலப்பதக்கத்தை (1 மணி 41 நிமிடம் 34.72 வினாடி) கைப்பற்றினார்.