தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்-அமைச்சர்..!

தேசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக கூடைப்பந்து அணிகளுக்கு ரூ.42 லட்சம் ஊக்கத் தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
image courtesy: CMOTamilNadu twitter
image courtesy: CMOTamilNadu twitter
Published on

சென்னை,

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு ரூ.42 லட்சம் ஊக்கத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி தமிழக அணி 11-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

பெண்கள் பிரிவில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளாவை தோற்கடித்து தமிழக அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த நிலையில் தேசியகூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பாராட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரிய ஊக்கத்தொகையாக, தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் கூடைப்பந்து அணியை சேர்ந்த 12 வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணியை சேர்ந்த 12 வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாயும், எனமொத்தம் 42 லடசம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், அணிகளின் வெற்றிக்காக அயராது உழைத்த பயிற்சியாளர்கள் மற்றும் கூடைப்பந்து சங்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com