

சென்னை,
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, உருகுவே அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, சிலி, தென்கொரியா, பிரான்ஸ் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடி வில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புரோ லீக் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப் பட்டது.
இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: சவிதா, பிச்சு தேவி கரிபாம்.
பின்களம்: சுஷிலா சானு புக்ராம்பாம், இஷிகா சவுத்ரி, லால்தான்ட்லுவாங்கி, ஷில்பி டபாஸ், ஜோதி, நிக்கி பிரதான்.
நடுகளம்: சலிமா டெடி (கேப்டன்), நேஹா, சுனெ லிதா டாப்போ, சாக்ஷி ராணா, தீபிகா சோரெங், சோனம், லால்ரெம்சி யாமி.
முன்களம்: நவ்னீத் கவுர், தீபிகா, ருதுஜா தாதாசோ பிசால், இஷிகா, அன்னு.