நார்வே செஸ் போட்டி இன்று தொடக்கம்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

கார்ல்சன் உள்ளிட்ட 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
நார்வே செஸ் போட்டி இன்று தொடக்கம்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
Published on

ஆஸ்லோ,

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), வின் சென்ட் கீமர் (ஜெர்மனி), அலிரெஜா பிரோஸ்ஜா (பிரான்ஸ்), வெஸ்லி சோ (அமெரிக்கா) ஆகிய 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர் வாகை சூடுவார். ஆண்டின் இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட உள்ள தமிழகத்தின் குகேசுக்கு தன்னை பட்டைதீட்டிக்கொள்ள இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும். ஆனாலும் உள்ளூர் ஹீரோ கார்ல்செனை சமாளிப்பது தான் அவருக்கு கடும் சவாலாக இருக்கும்.

கிளாசிக்கல் முறையிலான இதில் ஒவ்வொரு ஆட்டமும் 2 மணி நேரம் கொண்டது. 41-வது நகர்த்தலுக்கு பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 10 வினாடி ஒதுக்கப்படும். வெற்றிக்கு 3 புள்ளி வழங்கப்படும். டிரா ஆகும் பட்சத்தில் ஆர்மகேட்டன் முறையில் முடிவு அறியப்படும். ஆர்மகேட்டன் முறையில் வெற்றி பெறும் வீரருக்கு 1½ புள்ளியும், தோல்வி அடையும் வீரருக்கு ஒரு புள்ளியும் கிடைக்கும்.

இதே போல் 10 சுற்று கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ஜூ ஜினெர், ஜூ வென்ஜன் (இருவரும் சீனா), கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா), அன்னா முசிசுக் (உக்ரைன்) பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com