ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று இன்று தொடக்கம்

ஒலிம்பிக் போட்டி பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடக்கிறது.
ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று இன்று தொடக்கம்
Published on

பிஷ்கேக்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதன் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தீபக் பூனியா (86 கிலோ), சுஜீத் கலக்கல் (65 கிலோ) ஆகியோர் துபாய் விமான நிலையத்தில் தவிக்கிறார்கள். அங்கு வரலாறு காணாத மழை காரணமாக இவர்களது பயணம் தாமதமாகியுள்ளது. இருவரும் போட்டிக்குள் கிர்கிஸ்தான் சென்றடைவார்களா என்பது சந்தேகம் தான்.

மற்ற 15 பேரில் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதே போல் 23 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் அன்ஷூ மாலிக் (57 கிலோ), மன்சி (62 கிலோ), வீரர் அமன் செராவத் (57 கிலோ) உள்ளிட்டோரும் அணியில் கவனிக்கத்தக்க நட்சத்திரங்களாக உள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து இதுவரை அன்திம் பன்ஹால் மட்டுமே தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com