பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 4 Sept 2024 9:35 AM IST (Updated: 4 Sept 2024 10:04 AM IST)
t-max-icont-min-icon

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வரலாற்றில் முதல்முறையாக 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் 1.85 மீட்டர் உயரம் தாண்டி அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார். 2016-ல் தங்கமும், டோக்கியோ 2020-ல் வெள்ளியும், பாரிஸ் 2024-ல் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் வரலாற்றில் முதல்முறையாக மொத்தம் 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். பாரா ஒலிம்பிக் தொடர் இன்னும் நிறைவு பெறாத நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story