

டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் மன் காய் சூ-வுடன் மோதினார். இதில் 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனையடுத்து பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5 ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தார் கிருஷ்ணா நாகர். இதன் மூலம் பாராஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் டோக்கியோ பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் கிருஷ்ணா நாகருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில், இது கிருஷ்ணா நாகரின் வரலாற்று நிகழ்ச்சி. வலிமை மற்றும் உறுதியுடன், பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்று மூவர்ணத்தை உயர வைத்து உங்கள் திறமையை நிரூபித்துள்ளீர்கள். உங்கள் மேன்மை பாராட்டத்தக்கது. பல இந்தியர்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில், டோக்கியோ பாராஒலிம்பிக்கில் நமது பேட்மிண்டன் வீரர்கள் சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணா நாகரின் மிகச்சிறந்த சாதனை, ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். அவரின் முன்னேற்றம் சிறக்க வாழ்த்துகிறேன் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.