

சர்வதேச அளவில் தொடர்ந்து வெற்றி மகுடங்களைச் சூடி வருகிறார்கள், இந்திய வீரர்கள்.
உலகளாவிய இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்களே எதிரெதிராக மோதுவதும் தற்போது நடக்கிறது.
உதாரணம், சமீபத்திய அமெரிக்க ஓபன். இதில் வென்றவரும், தோற்றவரும் இந்தியரே.
தோற்றவர் ஆந்திரத்தின் பாருப்பள்ளி காஷ்யப் என்றால், வென்றவர் கேரளத்தின் எச்.எஸ். பிரணாய்.
ஒரு சூப்பர் சீரிஸ் தொடரை வென்ற பெருமிதம் பிரணாயின் முகத்தில் படர்ந்திருக்கிறது.
அவரது பேட்டி...
எப்படி நீங்கள் பேட்மிண்டனுக்கு வந்தீர்கள்?
நான் பத்து வயதில் பேட்மிண்டன் ஆட ஆரம்பித்தேன். எங்கப்பா பேட்மிண்டன் விளையாடி வந்தார். அவரைப் பார்த்துத்தான் எனக்கும் இதில் ஆர்வம் பிறந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சுமார் ஐந்தாண்டு காலம், அப்பாவின் பயிற்சியில்தான் நான் ஆடினேன். அவ்வப்போது ஒன்றிரண்டு வெளிப் பயிற்சியாளர்கள் எனக்குப் பயிற்சி கொடுத்தாலும் சிறுவயதில் நான் பெரும்பாலும் அப்பாவின் வழிகாட்டலில்தான் ஆடினேன். பத்தாம் வகுப்பு முடித்தபிறகு, இரண்டாண்டு காலம் தீவிரமாக பேட்மிண்டன் ஆடிப் பார்ப்பது, சரிவந்தால் அதில் தொடர்வது, இல்லாவிட்டால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது என்று பெற்றோருடன் பேசித் தீர்மானித்தேன். நல்லவேளையாக அந்தக் காலகட்டம் எனக்கு நன்றாக அமைய, ஒரு தொழில்முறை வீரராக பேட்மிண்டன் விளையாடுவது என முடிவு செய்தேன்.
இந்த ஆண்டு உங்களுக்கு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து?
இந்த ஆண்டு என்னைப் பொறுத்தவரை பரவாயில்லை என்று சொல்வேன். நான் பிரீமியர் லீக் தொடரில் தோல்வியே சந்திக்காமல் ஆடினேன். ஆனால் அதற்கப்புறம் மூன்று, நான்கு மாத காலம் சிறப்பாக அமையவில்லை. தற்போது நான் மீண்டும் பார்முக்கு திரும்பியிருக்கிறேன். இப்போது நான் பெற்றிருக்கும் சில வெற்றிகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இது இப்படியே தொடரும் என்று நம்புகிறேன்.
அமெரிக்க ஓபனில் நீங்கள் பெற்ற வெற்றியின் ரகசியம் என்ன?
நான் தன்னம்பிக்கையுடன் விளையாடியதுதான் என்று கூறுவேன். நான் இந்தோனேசிய ஓபனில் விளையாடிய விதம் எனக்கு அபார நம்பிக்கையைக் கொடுத்தது. அங்கு உலகின் சிறந்த வீரர்கள் சிலருக்கு இணையாக என்னால் விளையாட முடிந்தது. அமெரிக்க ஓபனில் ஜப்பானிய வீரர் கான்டா சுனேயாமாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நான் ஒரு மாதிரி போராடி வென்றேன். எனது ஆட்டம், எனக்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை இருந்ததால், அடுத்த இரு போட்டிகளும் எனக்கு ஓரளவு எளிதாகவே இருந்தன.
காஷ்யப்புக்கு எதிரான இறுதிப்போட்டி திரில்லிங் ஆக இருந்தது. நீங்கள் அவரை நன்றாக அறிவீர்கள். இறுதிப் போட்டியில் அவர் ஆடியவிதம் பற்றிக் கூறுங்கள்...
காஷ்யப் அப்போது அற்புதமாக ஆடி வந்தார். அவருக்கு சில கடினமான போட்டிகள் அமைந்தன. ஆனாலும் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்துவந்தது. நான் அவரைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் களத்துக்குத் திரும்பிய காஷ்யப், நன்றாக ஆடினார். அவரைவிட இளவயது வீரர்களான எங்களுக்கு அது மிகவும் உத்வேகம் அளிக்கும் விஷயம். இறுதிப்போட்டியும் சரிசமமான மோதலாகவே அமைந்தது. அந்தப் போட்டியில் எங்கள் இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற்றிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, நான் மூன்றாவது கேமில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுவிட்டேன். அதுதான் எனது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
பொதுவாக ஒரு போட்டித் தொடருக்கு நீங்கள் எப்படித் தயாராகிறீர்கள்?
ஒரு வழக்கமான முறை என்று இல்லை. ஆனால் பயிற்சி அட்டவணை பெரும்பாலும் மாறாது. ஒரு போட்டித் தொடருக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு, அதற்கு எப்படித் தயாராவது என்று முடிவெடுப்போம். ஆக, ஒவ்வொரு தொடருக்கும் தயாராகும் விதமும் மாறிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் நாம் சில விஷயங்களை முயற்சித்துப் பார்க்க விரும்புவோம். சில நேரங்களில் நாம் அவ்வாறு செய்வதில்லை. நாம் நிறைய விஷயங்களை முயற்சித்துப் பார்க்க விரும்புவதெல்லாம் களத்தில் கைகொடுக்காது.
நாம் திட்டமிட்டபடி களத்தில் நடப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதாரணமாக, எதிராளியின் கை ஓங்கி யிருக்கும்போது?
அது கடினம்தான். சிலசமயங்களில் நாம் என்ன செய்வதென்றே தோன்றாது. நாம் பயிற்சி செய்த விதத்தில் போட்டி அமையாது. அப்போது நாம் நிராதரவாக நிற்பது போலத் தோன்றும். அந்த நிலையிலிருந்து எப்படியாவது மீண்டுவிடத் துடிப்போம். அப்போது நாம் வழக்கத்துக்கு மாறாகச் சிந்திக்க வேண்டும். அது மாதிரியான நிலைகளை நான் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். முதல் கேமை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடும். அந்நிலையில், இரண்டாவது கேமில் சில வித்தியாசமான ஷாட்களை முயன்று பார்ப்பேன். அவை பலன் கொடுக் கும்போது, தன்னம்பிக்கை தானாக திரும்பி விடும். சில நேரங்களில் மூளை முடங்கியது போல ஆகிவிடும். ஆனால் அந்நிலையிலும் அமைதியாக இருந்து, வெற்றி வழிக்குத் திரும்பப் பார்க்கவேண்டும்.
உங்களின் உயர்வில் பயிற்சியாளர் கோபிசந்தின் பங்கு பற்றி?
பெரும் எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகளுக்கு அவர் பயிற்சி அளிப்பதும், அவர்களை சர்வதேச சாம்பியன்களாக உயர்த்தியிருப்பதும் அசாதாரணமான விஷயங்கள். ஒரு பயிற்சியாளராக மட்டும் அல்லாமல், அவர் பேட்மிண்டன் ஆடத் தொடங்கியவிதம், காயங்களில் இருந்து மீண்டது, சர்வதேசப் பட்டங்கள் வென்றது எல்லாமே எங்களைப் போன்ற வீரர் களுக்கு ஊக்கம்தான்.
இந்தியாவில் பேட்மிண்டன் இந்த அளவு வளர்ச்சி பெற்றிருப்பதன் பின்னணியில் இருப்பது என்ன?
ஒவ்வோர் ஆண்டும் நமது வீரர், வீராங்கனைகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஜூனியர் வீரர்களுக்கு ஆரம்பத்திலேயே நல்ல ஆட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது மிகவும் முக்கியமானது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை. அகில இந்திய பேட்மிண்டன் கழகத்தின் உதவியால் நாங்கள் பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறோம். நாட்டில் போட்டித் தரம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பேட்மிண்டன் அடைந்திருக்கும் வளர்ச்சியில் சாய்னாவுக்கும் சிந்துவுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. அவர்கள் சர்வதேச அளவில் சாதித்தது, நமது பேட்மிண்டனுக்கு பெரும் நன்மை புரிந்திருக்கிறது.
சமீபகாலமாக, சர்வதேசத் தொடர்களின் இறுதிப்போட்டியில், இந்தியர்கள் இருவரே மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து?
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நமக்கு நல்ல நிலை நிலவுகிறது. அதிலும் கடந்த மூன்று, நான்கு மாத காலம் அற்புதம். ஆனால் இனிமேல் எதிராளிகள் எங்களை மேலும் சீரியசாக எடுத்துக்கொள்வார்கள், கூடுதல் முயற்சியுடன் தயாராவார்கள் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் நாங்கள் தொடர்ந்து நன்றாக விளையாட முயல்வோம்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து...?
நான் இப்போதைக்கு இந்திய அணிக்கு தேர்வுபெற வாய்ப்பில்லாத நிலையில், அதுபற்றிச் சிந்திப்பதில் அர்த்தமில்லை. எனது ஆட்டத்தரத்தை இன்னும் உயர்த்தி, மேலும் பல சர்வதேச பட்டங்களைக் கைப்பற்றவேண்டும் என்பதில்தான் இப்போது எனது கவனமெல்லாம்.
பிரணாயின் ஆட்டத்தைப் போலவே அவரது வார்த்தைகளிலும் அத்தனை இயல்பு.