

புதுடெல்லி,
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளவேனில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.முன்னதாக, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவிலும் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதார்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்று இளவேனில் அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் நாட்டுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார்கள். 2 வெள்ளி பதக்கங்களை இளவேனில் வாலறிவன் வென்றது மேலும் சிறப்பு வாய்ந்த தருணம். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிக்க இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.