

புதுடெல்லி,
9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் தொடரின் இந்திய சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் ரூர்கேலாவில் வருகிற 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
33 பேர் கொண்ட இந்திய உத்தேச ஆக்கி அணியில் முன்னாள் கேப்டனும், கடந்த 2 ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த 33 வயது மன்பிரீத் சிங் இடம் பெறவில்லை. 411 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கும் மன்பிரீத் சிங் கடந்த 15 ஆண்டுகளில் உத்தேச அணியில் இடம் பெறாமல் போவது இதுவே முதல்முறையாகும்.