புரோ கபடி லீக்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அரியானா ஸ்டீலர்ஸ்

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
image courtesy; twitter/ @ProKabaddi
image courtesy; twitter/ @ProKabaddi
Published on

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிசுற்றை எட்டின. 3 முதல் 6-வது இடத்தை பெற்ற அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்தித்தன. இதில் பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புனே அணி, பாட்னா பைரேட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சுடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் அரியானா 19-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீள்வதற்கு ஜெய்ப்பூர் கடுமையாக போராடியும் பலன் இல்லை. திரில்லிங்கான ஆட்டத்தில் அரியானா 31-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூருக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இதே மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com