புரோ கபடி லீக்: புனேரி பால்டன் அணி சாம்பியன்

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
image courtesy: ProKabaddi twitter
image courtesy: ProKabaddi twitter
Published on

ஐதராபாத்,

கடந்த டிசம்பர் 2-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கிய 10-வது புரோ கபடி லீக் தொடரில் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களை பிடித்து நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறின.

தபாங் டெல்லி (79 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (70 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (70 புள்ளி), பாட்னா பைரேட்ஸ் (69 புள்ளி) ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை சொந்தமாக்கி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் (பிளே-ஆப்) பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தன.

முதலாவது அரைஇறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அஸ்லாம் முஸ்தபா தலைமையிலான புனேரி பால்டன், ஜெய்தீப் தாஹியா தலைமையிலான அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி, 28-25 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com