புரோ வாலிபால் லீக் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி தொடக்கம்

புரோ வாலிபால் லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.
புரோ வாலிபால் லீக் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி தொடக்கம்
Published on

புதுடெல்லி,

இந்திய கைப்பந்து சம்மேளனம், பேஸ்லைன் நிறுவனத்துடன் இணைந்து புரோ வாலிபால் லீக் போட்டியை இந்த ஆண்டு தொடங்கியது. பிப்ரவரி மாதத்தில் சென்னை மற்றும் கொச்சியில் நடந்த இந்த போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யூ மும்பா வாலி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதின. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில் 2-வது புரோ வாலிபால் லீக் போட்டி அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆமதாபாத், ஐதராபாத், கொச்சி ஆகிய 3 நகரங்களில் போட்டி அரங்கேறுகிறது. மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டி குறித்து இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் அளித்த ஒரு பேட்டியில், புரோ வாலிபால் லீக் போட்டி நமது நாட்டில் வாலிபால் ஆட்டத்தையே மாற்றியமைக்க கூடியதாக மாறி வருகிறது. இந்த போட்டி நமது நாட்டின் இளம் கைப்பந்து வீரர்களிடம் ஆர்வத்தை தூண்டி இருப்பதுடன், உலகின் சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பையும் நமது வீரர்களுக்கு உருவாக்கி இருக்கிறது.

இந்த வருடத்தில் நடந்த ஆசிய அளவிலான கைப்பந்து போட்டியில் நமது சீனியர் ஆண் கள் அணி மற்றும் 23 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணி பெற்ற வெற்றிகள் லீக் போட்டி அனுபவத்தால் கிடைத்த பலனுக்கு ஒரு சான்றாகும். இந்த போட்டியின் மூலம் நமது வீரர்கள் உலக தரத்தை எட்டுவார்கள் என்று நம்புகிறோம். வருங்காலங்களில் இந்த லீக் போட்டி இந்திய கைப்பந்தை உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com