ஐஸ் ஆக்கியுடன் தொடர்பு இல்லையா? - பி.டி. உஷாவுக்கு எதிரான புகார்கள் தள்ளுபடி

ஐஸ் ஆக்கி சங்கத்தின் சார்பில் பெண்கள் பிரதிநிதியாக பி.டி. உஷா பரிந்துரைக்கப்பட்டார்.
பி.டி. உஷா
Published on: 

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பி.டி. உஷாவுக்கு எதிராக எழுந்த புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஐஸ் ஆக்கி சங்கத்தின் சார்பில் பெண்கள் பிரதிநிதியாக அவர் பரிந்துரைக்கப்பட்டதை எதிர்த்து அளிக்கப்பட்ட புகார்களை விசாரித்த தேர்தல் அதிகாரி, அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார்.

ஐஸ் ஆக்கி சங்கம் பரிந்துரை

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பதவியில் இருக்கும் பி.டி. உஷா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் தகுதி பெற்ற நான்கு பெண் விளையாட்டு வீரர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இதனால், அவருக்கு நேரடியாக அந்தப் பிரிவின் மூலம் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஐஸ் ஆக்கி அசோசியேஷன் ஆப் இந்தியா (IHAI) சார்பில் பெண்கள் பிரதிநிதியாக பி.டி. உஷா பரிந்துரைக்கப்பட்டார். அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஹர்ஜிந்தர் சிங்கும் ஆண் பிரதிநிதியாகப் பரிந்துரைக்கப்பட்டார்.

எதிர்ப்பு தெரிவித்த தரப்பு

ஆனால், உஷாவுக்கு ஐஸ் ஆக்கி விளையாட்டுடன் தொடர்பு இல்லை என்றும், அந்த விளையாட்டின் தேசிய அமைப்பில் அவர் உறுப்பினராக இல்லாததால் பிரதிநிதியாக நியமிக்க முடியாது என்றும் ஐஸ் ஆக்கி சங்கத்தின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவாவிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, ஐஸ் ஆக்கி சங்கத்திடம் விளக்கம் கேட்ட தேர்தல் அதிகாரி, விசாரணையும் நடத்தினார். அப்போது சங்கத்தின் பிரதிநிதிகள், உஷாவும் பொதுச் செயலாளர் ஹர்ஜிந்தர் சிங்கும் தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என்று தெரிவித்தனர். இதற்கான ஆவணங்களையும் உறுதிமொழிப் பத்திரத்தையும் சமர்ப்பித்தனர்.

நிராகரித்த தேர்தல் அதிகாரி

ஒருவர் வேறு விளையாட்டுடன் தொடர்புடையவராக இருந்தாலும், மற்றொரு தேசிய விளையாட்டு அமைப்பின் உறுப்பினராக இருக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டது.

இதற்கு, வேறு தேசிய விளையாட்டு அமைப்பில் உறுப்பினராக இருப்பது மட்டும் ஒருவரை மற்றொரு அமைப்பின் பிரதிநிதியாக நியமிப்பதற்குத் தகுதியற்றவராக மாற்றாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்கம் அளித்தது.

மேலும், இதுபோன்ற உறுப்பினர் தொடர்பான கட்டுப்பாடு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அரசியலமைப்பிலும், தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பினரின் விளக்கங்களையும் ஆவணங்களையும் பரிசீலித்த தேர்தல் அதிகாரி, உஷா மற்றும் ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரின் நியமனங்களுக்கு எதிரான புகார்களை நிராகரித்தார்.

டிசம்பர் 5-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பி.டி. உஷா மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்பது அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே அமையும்.

X