

பாரீஸ்,
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் பூசனனை தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், அரையிறுதி சுற்றில் உலகின் 15-ம் நிலை வீராங்கனையான சயாகா டகாஹஷியை பி.வி.சிந்து சந்தித்தார். பரபரப்பாக நடத்த இப்போட்டியில் 21-18, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் சயாகாவிடம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து பி.வி.சிந்து வெளியேறினார். சயாகாவிடம் பி.வி.சிந்து தோல்வியடைவது இது 4-வது முறையாகும்.
கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் சாம்பியன்ஷிப் தொடரிலும் காலிறுதி சுற்றுடன் பி.வி. சிந்து வெளியேறினார். முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.