நார்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர்... வரலாறு படைத்த பிரக்ஞானந்தா

இறுதி சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பிரக்ஞானந்தா பட்டம் வென்றார்.
நார்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர்... வரலாறு படைத்த பிரக்ஞானந்தா
Published on

லண்டன்,

ஒஸ்லோவில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டத்தை உறுதி செய்தார்.

உலகின் சிறந்த வீரர்களை முந்தி சாதனை

இந்த நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன், குகேஷ், அலிரேசா பிரோஸ்ஜா, வெஸ்லி சோமற்றும் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இத்தகைய கடுமையான போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றிருப்பது இந்திய செஸ் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

பின்னடைவை வெற்றியாக மாற்றிய கம்பேக்

தொடரின் நடுப்பகுதியில் சில முக்கிய ஆட்டங்களில் புள்ளிகளை இழந்ததால், பிரக்ஞானந்தாவின் சாம்பியன் வாய்ப்பு மங்கியிருந்தது. ஆனால் முக்கியமான கட்டத்தில் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அலிரேசா பிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் ஆகியோருக்கு எதிரான கிளாசிக்கல் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று மீண்டும் பட்டப் போட்டிக்குள் நுழைந்தார். குறிப்பாக, 9-வது சுற்றில் குகேஷுக்கு எதிராக பெற்ற வெற்றி அவரது பட்டப் பயணத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

கார்ல்சனை இருமுறை வீழ்த்திய பிரக்ஞானந்தா

இந்தத் தொடரின் சிறப்பம்சமாக, நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா இரண்டு முறை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, ஒரே தொடரில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், 2026-ம் ஆண்டில் கிளாசிக்கல் போட்டிகளில் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையையும் பிரக்ஞானந்தாநிகழ்த்தியுள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்த சென்னை இளைஞர்

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி, தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் இந்திய செஸ் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.உலக சாம்பியன்கள் மற்றும் முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்ற தொடரில் சாம்பியனாகி, நார்வே செஸ் வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பதித்துள்ளார் பிரக்ஞானந்தா.

X

Daily Thanthi
www.dailythanthi.com