பார்முலா ஒன் கார் பந்தயம்; ஹாஸ் அணியில் இருந்து ரஷிய வீரர் நீக்கம்

பார்முலா ஒன் கார் பந்தயத்திற்கான ஹாஸ் அணியானது ரஷிய வீரர் நிகிடாவுடனான ஒப்பந்தத்தினை ரத்து செய்துள்ளது.
Image Courtesy : Skysports
Image Courtesy : Skysports
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் சூழல் காணப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்களை அந்தந்த நாடுகள் இயக்கி மீட்டு வருகின்றன. இந்த போரால், குடிமக்களில் 752 பேர் உயிரிழந்து உள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கார் பந்தய போட்டிகளை நடத்தும் பார்முலா ஒன் (எப் ஒன்) அமைப்பு, கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை நடத்துவதில் இருந்து ரஷியாவை சமீபத்தில் நீக்கியது. ரஷிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ஏற்பாட்டாளர்கள் உடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்படுகிறது. இதனால், ரஷியாவில் வருங்காலத்தில் எப் ஒன் கார்பந்தய போட்டிகள் நடைபெறாது என அதுபற்றிய அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

எனினும், எப் ஒன் அமைப்பின் முன்னாள் தலைவர் பெர்னீ எக்ளெஸ்டோன் கூறும்போது, நான் அறிந்தவரை ரஷியாவில் போர் எதுவும் இல்லை. அதனால் கார் பந்தய போட்டிகள் நடத்தப்பட்டால் யாருக்கும் எதுவும் ஏற்படாது.

ரஷியாவை இந்த வழியில் தண்டிக்க நினைப்பது புதினை எந்த வகையிலும் தண்டிக்காது. கார் பந்தயமெல்லாம் அவருக்கு ஒரு விசயமே இல்லை என கூறினார். இந்த நிலையில், பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தும் ஹாஸ் நிறுவனம், ரஷிய வீரரான நிகிடா மேஸ்பின் என்பவருடனான ஒப்பந்தத்தினை ரத்து செய்துள்ளது. புதின் உடனான அவரது குடும்பத்தின் உறவால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால், அவரது வருங்காலம் பற்றிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதேபோன்று, சாம்பியன் பட்டத்திற்கான விளம்பரதாரரான உரால்கலியின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றிய அறிவிப்பில், உக்ரைன் மீது நடத்தப்படும் போரால் எங்களுடைய அமைப்பு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளது. போர் விரைவில் முடிவுக்கு வந்து அமைதி ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்று அதில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com